மூன்று தசாப்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் முப்படையின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் ,ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் ,ராணுவத்தின் பங்களிப்புடன் வட பகுதி மக்களின் சுகாதார வசதிகளை முன்னேற்றுவதற்கு சுகாதார அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை, ஊர்காவற்துறை தள வைத்தியசாலை, வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை, வேலணை பிரதேச வைத்தியசாலை மற்றும் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் வார்ட்டுத் தொகுதிகள், மருத்துவ அதிகாரிகளுக்கான வதிவிடங்களை நிர்மாணிப்பது உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி பிரதேசத்தின் மல்லாவி தள வைத்தியசாலை, மாங்குளம் தள வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் சம்பத் நுவர மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன எனவும் வன்னிப் பிரதேசத்தில் வவுனியா தள வைத்தியசாலை, மாந்தை மேற்கு கிராமிய வைத்தியசாலை, மருத்துவ அதிகாரிகளுக்கான வதிவிடங்கள் நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள அனைத்து திட்டங்களையும் சுகாதார அமைச்சுக்கு கையளிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது