மூன்று வருடங்களிற்கு முன்னர் இது போன்றவொரு நாளில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன் இன்று அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல விடயங்கள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய மின் கட்டமைப்பிற்கு 100 மெகாவோட் சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நிறைவுகூரும் முகமாக இன்று (21) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று தன் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்திற்கேற்ப, ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண்விரயம் என்பவற்றுடன்கூடிய ஊழல் அரசியலை நாட்டில் இல்லாமற்செய்து சிறந்த பண்புகளுடன் கூடிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி தெரிவித்தார்.
நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் சித்தியடைந்துள்ளதா இல்லையா என்பது குறித்து தற்போது யாராலும் உறுதிப்படுத்த முடியாது என்பதுடன் நல்லாட்சி அரசின் பதவிக்காலம் நிறைவடைகையில் தாம் சித்தியடைந்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களையும் தரவுகளையும் முன்வைக்கக்கூடிய ஆற்றல் தமக்கு காணப்படுகின்றதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.