சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையையடுத்து, அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூர் சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா உறவினர்கள் வீடுகளில் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் 187 இடங்களில் நடத்திய சோதனையில் 7 கோடி ரூபா பணம் மற்றும் 5 கோடி ரூபா பெறுமதியான மதிப்பிலான தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் பல பெறுமதியான ஆவணங்களும் கைப்பற்றப்படடிருந்தன. அத்துடன் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சசிகலா மற்றும் அவரினர் உதவியாளரின் அறைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பல முக்கிய விடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றினை அடிப்படையாக கொண்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஒரு பெண் அதிகாரி தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் இன்று முதல் 3 நாட்களுக்குள் சசிகலாவிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளநிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரமும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.