பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவி விலக கோரி எதிர்வரும் நவம்பர் 2-ந் திகதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இம்ரான்கான் கட்சி அலுவலகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் தொண்டர்கள் வருகையை தடுப்பதற்காக வீதிகளில் தடைகளும் போடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தியதிய வேளை பொலிசார் தடுக்க முற்பட்டதால் கலவரம் ஏற்பட்டுள்ளதாகவும் கலவரத்தை பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பிறபகுதிகளில் இருந்து இஸ்லாமாபாத் நகரை இணைக்கும் பெஷாவர்-இஸ்லாமாபாத் நெடுஞ்சாலயை போலீசார் மூடியுள்ளனர். ஆனால், மாற்றுப்பாதை வழியாக தொண்டர்கள் இஸ்லாமாபாத் நகரை வந்தடைய வேண்டும் என இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கானின் போராட்டத்தை பாகிஸ்தானின் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்துக்கு எதிரான நடவடிக்கை என குறிப்பிட்டுவரும் பிரதமர் நவாஸ் ஷெரிப், கடந்த இருநாட்களாக பொதுக்கூட்டங்களின் மூலம் மக்களை சந்தித்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.