நிர்வாகம், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை விவகாரங்களில் நீதிபதிகள் தலையிடக் கூடாது என இந்திய மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியின 2ம் நாள் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நீதித்துறைக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல்தான் நீதித்துறைக்கு நேர்மையும் முக்கியம். சிக்கலைத் தவிர்க்க நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்ற சட்டப்பேரவைக்கு இடையில் சமநிலையை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தனிமனித உரிமைகளை அரசாங்கம் ஆக்கிரமித்தால், அந்த வேளையில் மக்கள் பக்கம்தான் நீதித்துறை நிற்கும் எனவும் நீதித்துறை தலையிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.