வடமாகாண சபைக்கு 7 தங்க விருதுகள் பாராட்டுவிழா – முதலமைச்சர் உரை
அனைவருக்கும் வணக்கம்!
இன்றைய இந்தப் பாராட்டுவிழா உங்கள் ஒவ்வொருவருக்கும் உரியது. உங்களுக்கு என்று கூறும் போது உங்கள் பதவிகளில் உங்களுக்கு முன் இருந்தவர்களையும் குறிப்பிடுகின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் கடமை உணர்ச்சியுடன் வேலை செய்ததால்த்தான் இந்த விருதுகளைப் பெறக் கூடியதாக இருந்தது.
பாராளுமன்ற சபாநாயகரையும் அதன் செயலாளர் நாயகத்தையும் அண்மையில் கொழும்பில் சந்தித்தேன். அப்போது இந்த விருதுகள் பற்றியும் பேசப்பட்டது. காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடல்கள் தெற்கில் அதிகம் என்றும் வடக்கில் அவ்வாறல்ல என்றும் கூறப்பட்டது. அதாவது அலுவலர்களை சட்டப்படி தமது காரியங்களை பக்கச் சார்பின்றி ஒழுங்காகச் செய்யவிட்டால் அவர்களின் அந்த அமைச்சு அல்லது திணைக்களம் செயலாற்றுகையில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று அடையாளம் காணப்பட்டது. அலுவலர்கள் பணியாற்றும் போது அசமந்தப் போக்கானது அடையாளங் காணப்பட்டால் அதனைத் தட்டிக் கேட்பதும் பக்கச் சார்பாக அலுவலர்கள் நடக்கத் தலைப்பட்டால் அதனை சுட்டிக் காட்டி அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதும் கொள்கைகளை வெளிப்படுத்துவதுந்தான் அரசியல்வாதிகளின் கடமையாக இருக்க வேண்டும் என்பது அங்கு சொல்லாமல் சொல்லப்பட்டது.
எம்மை வினைத்திறன் அற்றவர்கள் என்று இதுகாறும் விமர்சித்தவர்கள் சென்ற கால நியதிகளை வைத்து விமர்சித்தவர்களே. அதாவது ஒரு அரசியல்வாதி என்றால் தனக்குத் தேவையானவற்றைத் தட்டிப்பறித்து அலுவலர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்துபவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யாதவன் வினைத்திறன் அற்றவன் எனப்பட்டது.
முன்னைய இராஜபக்ச அரசாங்கம் மற்றும் முன்னைய இராணுவ ஆளுநர் அரசாங்கம் இருக்கும் போது அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. தாம் அடையாளங் காட்டுவனவற்றையே அலுவலர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றிருந்தது. அதுவும் இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர் ஆணையிட்டே தனது அலுவல்களை ஆற்றிக் கொண்டார். தனக்கு சாதகமாக நடப்பவர்களை தட்டிக் கொடுத்தார். மற்றவர்களைத் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார். இதைப்பார்த்த அலுவலர்களும் அதிகாரிகளுக்கு அடிபணிந்து சேவையாற்றத் தலைப்பட்டனர். அதுமட்டுமல்ல. அதிகாரிகளுக்கு சலாம் போட்டு தமக்குத் தேவையானவற்றையும் சட்டமுறைமைக்கு அப்பால் சென்று சாதித்து வந்தனர். ஒருவிடயத்தைச் செய்ய சட்டம் இடம் கொடுக்கின்றதா என்பதைப் பாராது தான்தோன்றித்தனமாக நடவடிக்கை எடுக்க இது வழிவகுத்தது. இதைத்தான் நல்ல நிர்வாகம் என்று எம்முட் பலர் அடையாளங் கண்டு அதனையே நாமும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.
இந்த நடைமுறை பிழையென்று அரசியலுக்கும் நிர்வாகத்திற்கும் வந்தவுடனேயே நாங்கள் அடையாளங் காண நேரிட்டது. சில விடயங்களை நாம் அவதானித்தோம். அதாவது நிர்வாக சேவை என்று ஒரு சேவையை உருவாக்கி, அதற்கான பயிற்சி அளித்து, அவர்களுக்கான நடைமுறைகளைச் சட்ட திட்டங்களை வகுத்து, அலுவலர்கள் அவற்றில் இருந்து வழுவ நேரிட்டால் உத்தியோக பூர்வமாக மாற்று நடவடிக்கைகள் எவ்வாறு எடுப்பது என்பது போன்ற பல வரையறைகளை அரசாங்கம் வகுத்திருந்தது.
பக்கச் சார்பில்லாமல் தமது கடமைகளைச் சட்டப்படி சிரத்தையுடன் செய்வதையே நிர்வாகச் சட்டமும் கணக்கியல் சட்டமும் எம் அலுவலர்களிடம் எதிர்பார்த்தன. அதைச் செய்யவிடாது அரசியல்வாதிகள் தமக்குப் பக்கச்சார்பாக அலுவலர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையென்றே எமக்குப்பட்டது. ஆகவே அலுவலர்கள் சட்டப்படி சிரத்தையுடன் பக்கச் சார்பின்றிக் கடமையாற்ற நாம் வழியமைத்துக் கொடுத்தோம். அண்மையில் மாற்றலாகிச் சென்ற வவுனியா அரசாங்க அதிபர் புஷ்பகுமார அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் அரசியல் ரீதியாக நான் எந்தவித உள்ளீடல்களிலும் இறங்காததைக் குறிப்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். எமது அலுவலர்கள் எமது அரசியல் ரீதியான உள்ளீடல்கள் இன்றி தமது கடமைகளைச் செய்தபடியால்த்தான் இந்த விருதுகள் தரப்பட்டுள்ளன என்று நம்புகின்றேன். இதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கின்றது. முக்கியமாக எமது பிரதம கணக்காளரினதும் அவரின் முன்னையவரினதும் பங்குகள் மிக அதிகமாக இருக்கின்றன.
வழிமுறைகளை, வரம்புகளை, வகுத்த நடைமுறைகளை கருத்தில்க் கொண்டு அரசியல் ரீதியான உள்ளீடல்கள் தமக்கு ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் எமது அலுவலர்கள் கடமையாற்றியதால்த்தான் இந்த விருதுகளை நாம் பெற்றுள்ளோம் என்று கருதுகின்றேன்.
இது விடயமாக பலர் பாராட்டுகளுக்கு உரியவர்கள்.
முதலில் எமது முதலமைச்சர் அமைச்சின் அலுவலர்கள் யாவரும். எமது அமைச்சின் அலுவலர்களே இங்கு இப்போது பிரசன்னமாய் இருக்கின்றார்கள். எனினும் வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலர்களும் பாராட்டுக்குரியவர்கள். அதற்கடுத்து பிரதிப்பிரதம செயலாளர் அலுவலக நிதிப்பிரிவின் அலுவலர்கள். நான்காவதாகச் சுகாதார திணைக்கள அலுவலர்கள். ஐந்தாவது நீர்பாசனத் திணைக்கள அலுவலர்கள். ஆறாவதாக கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை சுகாதார திணைக்கள அலுவலர்கள் . ஏழாவதாக வீதி அபிவிருத்தித் திணைக்கள அலுவலர்கள் ஆகிய அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
அதேபோன்று நிதிமுகாமைத்துவத்தில் சிறப்பான பெறுபேறுகளைப்பெற்று பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட நல்லூர்ப் பிரதேச சபை, வவுனியா (தெற்கு) பிரதேசசபை, மன்னார் பிரதேசசபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை மற்றும் கரைத்துரைப்பற்றுப் பிரதேசசபை ஆகிய ஐந்து பிரதேச சபைகளுக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.
வடமாகாணத்தின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் 2015ம் ஆண்டில் நிதி நடவடிக்கைகளின் அதியுயர் செயலாற்றுககைளை திறமையாக மேற்கொண்ட அவ்வத் திணைக்களங்களின் அமைச்சுக்களின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் பாராட்டிக் கௌரவிப்பதுடன் இவர்களின் முன்மாதிரியில் இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற சிறந்த நிதி முகாமைத்துவத்தைப் பேணி மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடுமையாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டு அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய எல்லா நிறுவனங்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
நன்றி.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்