குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தக் குற்றச் செயல் சந்தேக நபர் ஒருவர், தாம் நஞ்சு அருந்தியதாக கூறியதனால் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. பொஸ்னிய குரேடியாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளுக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
72 வயதான ஸ்லோபோடான் ப்ளாஜாக் ( Slobodan Praljak )என்ற நபரே இவ்வாறு நீதிமன்ற விசாரணைகளின் இடைநடுவில், சிறிய கண்ணாடி போத்தல் ஒன்றிலிருந்து எதனையோ குடித்துள்ளார். ஸ்லோபோடான் ப்ளாஜாக் ஆகிய நான் யுத்தக் குற்றவாளி கிடையாது, நீதிமன்றின் தீர்ப்பினை நிராகரிக்கின்றேன், நான் நஞ்சு அருந்திவிட்டேன் என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக அம்பியூலன்ஸ் ஒன்றை அழைத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2013ம் ஆண்டில் ஸ்லோபோடானுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குரேடியாவின் ஊடகங்கள் குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளன. எனினும், இந்த விடயத்தை இன்னமும் உறுதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகி;ன்றது.