காவிரி விவகாரம் தொடர்பில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்ய மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தொடரப்பட்டு இருந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு வெளியாகும் வரை தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
எனினும் நடப்பு பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படுவதால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரியும், இதற்காக இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும் தமிழக அரசு சார்பில் கடந்த 21-ந் தகிதி உச்ச நீதிமன்றில் முறையிடப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு இதுவரை வழங்க வேண்டிய 63 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வலியுறுத்தும் வகையில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் நேற்று மீண்டும் முன்னிலையாக முறையிட்டனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைத்திருக்கக் கூடிய சூழலில், எந்த மனுவையும் விசாரிக்க முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.