அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில்; கனமழை பெய்யும் என இந்திய மத்திய நீர்வள ஆணையத்தின், வெள்ளக்கணிப்பு இயக்கம் எச்சரித்துள்ளது. ஒக்கி புயலின் காரணமாக கேரளத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில், வங்கக்கடலில், இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படும், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று முதல் கனமழை தொடர வாய்ப்புள்ளது எனவும் இதனால் தமிழகம், கேரளா மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் உள்ள நதிகளின் நீரமட்டம் உயரும் எனவும் மத்திய நீர்வள ஆணையத்தின், வெள்ளக்கணிப்பு இயக்கம் எச்சரித்துள்ளது.
மேலும் அடுத்த 2-3 நாட்களுக்கு, நெல்லை மற்றும் தூத்துக்குடி வழியாக பாயும், தாமிரபரணி நதியின் நீரோட்டம் அதிகளவில் இருக்கும் எனவும் இதன் காரணமாக, வைகை நதியில் நீரோட்டம் உயரும் என்றும், வைகை அணையில், நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும், அணையை திறந்துவிடுவதற்கான தேவை உடனடியாக இருக்காது என்றும் வெள்ளக்கணிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.