அந்நிலையில் , தேர்தல் ஆணையகத்தில் பொது பெயரை பதிவு செய்து பொது சின்னத்தை பெற முயன்ற போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டமையினால் , பொது சின்னம் , பொது பெயரில் தேர்தலில் போட்டியிடும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது.
உதயசூரியனில் போட்டி.
அந்நிலையில், பொது கூட்டணி தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்து உள்ளதாகவும் அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது. .
பொது கூட்டணிக்கு பெயரை பதிவு செய்து சின்னம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான வீ . ஆனந்த சங்கரி தலைமை வகிக்கும் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து உள்ளதாக அறிய முடிகிறது.
மிக மோசமான கொள்கையுடைவர்கள்.
மிக மோசமான கொள்கையுடைய தமிழர் விடுதலை கூட்டணியுடன் ஒரு போதும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அத்துடன் சின்னத்தை பெறுவதில் சிக்கல் எனில் சைக்கிள் சின்னத்தில் பொது கூட்டணி தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு ஏனையவர்களுக்கு விருப்பம் இல்லை எனில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் நாம் தயார். அதனை விடுத்து மிக மோசமான கொள்கையுடைய தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நாம் ஒரு போதும் தயார் இல்லை என தெரிவித்தார்.
உதயசூரியனில் தான் போட்டியிடுவோம்.
அதேவேளை தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட பொது கூட்டணியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட சிலர் தீர்மானித்து உள்ளனர்.ஆனால் அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அந்நிலையில் பொது கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது என இறுதி தீர்மானம் எட்டப்பட்டால் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து சைக்கிள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் என அறிய முடிகிறது.