கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. வீராணம் ஏரியில் தென்ரெட்டை மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்கி வருவதாகவும் அந்த இடத்தை சுற்றி எண்ணை படலம் போல் படர்ந்து உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் சூடாக உள்ளதெனவும் 15 நாட்களாக இவ்வாறு தண்ணீர் பொங்கி வருகிறதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்பு கொண்டுகேட்ட போது இது தொடர்பில் சென்னையில் உள்ள ஆய்வகத்தில் தெரிவித்துள்ளதாகவும் இன்று அல்லது நாளை நேரில் வந்து அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ஏரியில் எரிவாயு வெளியேறுகிறதா அல்லது சுனாமி ஏற்படுவதற்கு முன்உருவாகும் அறிகுறியா என தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.