குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உதய சூரியன் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டால் மாத்திரமே தமிழரசு கட்சியை தோற்கடிக்க முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பொது எதிரணியாக தேர்தலில் களமிறங்கும் போது தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவோம் எனும் சுரேஷ் பிறேமசந்திரனின் நிலைப்பாட்டிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்.
அது தொடர்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் பிறேமசந்திரனிடம் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவோம் எனும் கருத்துக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உடன்படவில்லை. தமிழரசு கட்சியை தோற்கடிக்க பொது எதிரணியாக நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும். அதனை காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழரசு கட்சியை தோற்கடிப்பதாயின் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபல்யமான உதயசூரியன் சின்னம் பொருத்தமானது என பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அந்த கருத்தையே நாமும் முன் வைத்தோம். அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றுக்கொள்ள வில்லை. அதற்காக பல காரணங்களை முன் வைத்தார். அவற்றில் சரி பிழை என விவாதம் நடத்த நாம் முயலவில்லை.
பரந்துபட்டு எல்லோரையும் உதயசூரியன் சின்னத்தின் கீழ் ஒன்றிணைக்க முடியும் என நம்புகின்றோம். அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக எந்த முரண்பாடும் இல்லை.
சின்னம் தொடர்பில் பேசுவதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது. இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்து பேச உள்ளோம். என மேலும் தெரிவித்தார்.