பிரபல ஹிந்தி நடிகர் சசிகபூர் மும்பையில் இன்று திங்கட்கிழமை மாலை காலமானார். 79 வயதான சசிகபூர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார், இவர் ராஜ்கபூர், ஷம்மி கபூரின் இளைய சகோதரர் ஆவார். 1961-ம் ஆண்டு ‘தர்மபுத்திரா’ படத்தின் மூலம் அறிமுகமான சசிகபூர் தொடர்ந்து 116 ஹிந்திப் படங்களில் நடித்ததுள்ளார்.
2011-ம் ஆண்டு இந்திய மத்திய அரசின் பத்மபூஷன் விருதினையும் 2015-ல் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றிருந்தார். கபூர் குடும்பத்தில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெறும் 3-வது நடிகர் சசிகபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைய நீரோட்ட திரைப்படங்களில் பிரபலமானாலும் இணை சினிமா இயக்கத்தையும் சசிகபூர் ஊக்குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தீவார்’, ‘நமக்ஹலால்’, ‘ஹீராலால் பன்னாலால்’, ‘கபீகபீ’, ‘சில்சிலா’ என பல பிரபல ஹிட் திரைப்படங்களில் நடித்த சசிகபூர் பிரித்தானிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மெர்சண்ட் ஐவரி தயாரிப்பான ‘தி ஹவுஸ் ஹோல்டர்’ , ‘ஷேக்ஸ்பியர்வாலா’, ‘பாம்பே டாக்கி’, ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ ஆகிய படங்கள் அந்த வகையில் குறிப்பிடத்தகுந்த படங்களாகும்.