‘மாரி’ படத்தில் வில்லனாக மிரட்டினார் பாடகர் விஜய் யேசுதாஸ். இப்போது ‘படை வீரன்’ படத்தில் ஹீரோவாகக் களம் இறங்கியிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு…
பாரதிராஜாவுக்கும் உங்களுக்குமான போட்டிதான் படைவீரனா?
போட்டி என்று சொல்ல முடியாது. எங்களுக்குள் ஒரு துடிப்பான உறவு. அதுக்குள்ள ஒரு கதை இருக்கு. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் லவ் ஸ்டோரி அழகாக அமைந்தாலும்கூட, பாரதிராஜா சாருக்கும் எனக்குமான காட்சிகள் படத்தோட இதயம் மாதிரி. அதோடு நண்பர்கள், காதல் விஷயம்னு இழையோடும். கிராமமும் அது சார்ந்த சில சம்பவங்களும்தான் களம். அதை பக்கா கமர்ஷியல் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் தனா.
‘மாரி’க்குப் பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
2015 ஜூலையில் ‘மாரி’ படம் வெளியானது. அதன் பிறகு 2, 3 கதைகள் கேட்டேன். திகில், காதல்னு கலந்து வந்தன. இன்னும் கொஞ்சம் வித்தியாசமா இருந்தால் நல்லா இருக்குமென்னும் தோணுச்சு. அப்படியே ஆறு மாதங்கள் போனது. அதுக்கு இடையில் எப்பவும்போல பாடகரா பிஸியா இன்னொரு பக்கமும் ஓடிக்கொண்டே இருந்தேன். அப்போதான் தனாவோட போன். அவர் சொன்ன கதை ஈர்த்தது. இதுல நான் நடிச்சா பயங்கரமா இருக்கும்னு தோணல. ஆனா, ஒரு சேலஞ்சா இருக்கும்னு தோணுச்சு. தேனியைச் சுற்றியுள்ள கிராமப் பின்னணி வேற. எனக்குப் புது அனுபவம். அதோட பாரதிராஜா மாதிரியான ஜாம்பவனோடு பயணம். ஒரு நடிகனாக நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு அமைத்துக்கொடுத்த படமாவே இதைப் பார்க்குறேன்.
தனுஷ் எப்படி ‘படைவீரன்’ படத்துக்குள் ஒரு பாடகரா வந்தார்?
முழுக்க படப்பதிவு முடிச்சுட்டு சின்னச் சின்ன பேச் வொர்க்ல கவனம் செலுத்தின நேரம். இன்னும் சில காட்சிகளை பெட்டரா எடுக்கலாமேன்னு தோணினப்போ, பழைய மாதிரி தாடியெல்லாம் வளர்த்து ஷூட் பண்ணிக்கிட்டிருந்தோம். ஒரு நாள் தனுஷ் படத்தைப் பார்த்தார். ‘அட நல்லா வந்திருக்கே’ன்னு சொல்லிட்டு சில யோசனைகளும் கொடுத்தார். அந்த யோசனைகளோடு வேலைகள் நடந்தப்போ, ஒரு இடத்துல பாட்டு இருந்தா நல்லா இருக்குமென்னு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும் இயக்குநர் தனாவும் திட்டமிட்டாங்க. அப்போ அதை தனுஷ் பாடினால் இன்னும் நல்லா இருக்குமேன்னும் ஒரு பேச்சு வந்தது. அப்படித்தான் அவரைப் பாட வைத்தோம்.
உங்கள் பின்னணிக் குரலில் பல ஹீரோக்கள் டூயட் நடனம் ஆடியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நீங்களே டூயட் ஆடிய அனுபவம் எப்படி இருந்தது?
நாம நல்லா பாடின ஒரு பாட்டை விஷுவலா பார்க்கும்போது, ‘அடடா, ஹீரோ இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமே!’ன்னு சில நேரத்துல தோணிருக்கு. ஆனால், இன்னைக்கு நாம அந்த இடத்துல நின்னு ஆடும்போதுதான் அதோட சவால் புரியுது. அதை மனசுல வச்சு ரொம்பப் பொறுப்போட உழைச்சிருக்கேன். இனி, படம் பார்த்துட்டு மக்கள்தான் சொல்லணும்.
நீங்கள் நடிகரானதை அப்பா எப்படிப் பார்க்கிறார். அப்பாவுக்கு நடிப்பு மீது ஆர்வம் உண்டா?
அவருக்குக் கொஞ்சம்கூட நடிப்புமேல ஆர்வம் இருந்ததே இல்லை. ஒன்றிரண்டு படங்கள்ல முகம் காட்டினாலும், அதுல எல்லாம் அவர் அவராகவே வந்திருப்பார். இப்போ நான் நடிக்கிறதுகூட அவருக்குப் பிடிக்கல. சின்ன வயசுலேயே எனக்கு நடிக்கிற வாய்ப்புகள் அமைந்தன. அப்போ வேண்டாம்னு விட்டுட்டேன். இப்பவும் பாடகராக ஒரு பெயர் இருக்கு. அதோடு நடிப்பு வாய்ப்பும் அதுவாக அமையுது. அதனாலதான் இதுலயும் ஒரு கை பார்ப்போமேன்னு ஆரம்பிச்சிருக்கேன். பாடுறதை விட்டுட்டு நடிக்க வரனும்ன்னு நினைக்கல.
அடுத்த பட அறிவிப்பு எப்போது?
பாடகராக ஒரு அடையாளம் இருக்கு. அந்தத் துறையில பிஸியாக ஒரு பக்கம் வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. ‘நடிகர் விஜய் யேசுதாஸ் இந்தக் கதைக்குச் சரியாக இருப்பார்’ன்னு இயக்குநர்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கணும். ‘படைவீரன்’ படம் வெளிவந்ததும் அந்த மாதிரியான சூழல் உருவாக வாய்ப்பிருக்கு. ஒரு நடிகனாக நான் நிறைய கத்துக்கிட்டேன். பார்க்கலாம்.
Thehindu