புகையிலை மற்றும் சிகரட்டுக்கு எதிரான உலக சுகாதார தாபனத்தின் சாசனத்தில் கைச்சாத்திட்ட ஆசியாவின் முதலாவது நாடும் உலகின் நான்காவது நாடுமான இலங்கை இன்று புகையிலையை ஒழித்துக்கட்டும் விடயத்தில் முன்னிலை வகிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
புகையிலை, மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள்களிலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையை இலங்கையர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சிகரட் பக்கற்றுகளில் புகைத்தல் நூற்றுக்கு 80 வீதம் சுகாதாரத்திற்கு கேடானது என்ற எச்சரிக்கையுடனான படங்களை பிரசுரிக்க வேண்டுமென சட்டம் கொண்டு வரக் கிடைத்தது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் புகையிலைக்கான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் அது புகையிலையின் பாவனையை வெகுவாகக் குறைப்பதற்கு வழிவகுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு போதைப்பொருள் ஒழிப்புக்கான மிகவும் வினைத்திறன்மிக்க கொள்கைகளை அமைப்பதற்கும் ஒரு புதிய முறைமைகளைக் கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மதுசாரம் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் பாலித்த அபேகோன், போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கித்தலவ ஆராச்சி, சர்வதேச போதைப்பொருள், புகையிலை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவர் கிறிஸ்டினா ஸ்பெரகோவா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.