யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி நாளைமறுதினம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. அதன் இரண்டாவது பகுதி 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்தப்படும் என்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
33ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச் செய்தியாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது.
துணைவேந்தர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்முறை இரண்டு பகுதிகளாக நடாத்தப்படவுள்ளன. முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ளன.
இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், முகாமைத்துவ வணிக பீடம், கலைப்பீட சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இவர்களில், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் கலாநிதி பட்டத்தையும், 64 பேர் பட்டப்பின் தகைமைகளையும், முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த 293 பேர் வியாபார நிருவாக மாணி பட்டத்தையும், 48 பேர் வணிகமாணி பட்டத்தையும், கலைப்பீட சட்டத்துறையைச் சேர்ந்த 63 பேர் சட்டமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 53 பேர் விவசாய விஞ்ஞான மாணி பட்டத்தையும், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகின் 58 பேர் மருத்துவ ஆய்வு கூடத் தொழில் நுட்பம், மருந்தாளர், தாதியம் ஆகிய துறைகளில் விஞ்ஞானமானி பட்டங்களையும், வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 84 பேர் பிரயோக விஞ்ஞான மாணி பட்டத்தையும், வணிக கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 110 பேர் வணிகமாணி பட்டத்தையும் 10 பேர் நேரடியாகப் பிரசன்னமாகாத நிலையிலும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
2018, மார்ச் மாதம் நடைபெறவுள்ள 33 ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியில் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், கலைப்பீடம், மற்றும் உயர்பட்டப் படிப்புகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், வெளிவாரியாகப் பட்டம் பெறுபவர்களின் பட்டங்களும் உறுதிப்படுத்தப்படவுள்ளன – என்றார்.
ஐந்து அமர்வுகளில் முதலாம் அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாவது அமர்வு முற்பகல் 10.45 மணிக்கும், மூன்றாவது அமர்வு மதியம் 1.15 க்கும், நான்காவது அமர்வு பி.ப 3 மணிக்கும், ஐந்தாவது அமர்வு மாலை 4.30 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.