குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு கட்சிக்குள் புதிய உறுப்பினர்களை இணைந்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படட்டு வருகின்றனர்.
அந்த நிலையில் இதுவரையில் ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்கள் நடைபெற்று அவர்களை கூட்டமைப்புக்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்த்தலில் கூட்டமைப்பில் ஆசனம் கேட்டு கொடுக்காத நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி சிலந்தி சின்னத்தில் தனித்து தேர்தலில் போட்டியிட்டது. அதில் போட்டியிட மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டு விட்டதாக அறியமுடிகிறது.
அந்நிலையில் ஈ.பி.டி.பி கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சி. தவராசாவையும் தமிழரசு கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு தீவிர முயற்சிகளில் தமிழரசு கட்சியினர் ஈடுபட்டு உள்ளதாக அறிய முடிகிறது.