இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு முறை இந்து மதத்தினரால் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் நதிப்படுகைகளில் நடக்கிற கும்பமேளாவில் இந்து மக்கள் பெருந்திரளாக கூடி, புனித நீராடி, இறைவழிபாடு செய்வார்கள். இந்த கும்பமேளாவை இந்தியாவின் கலாசார பாரம்பரியம் என்று ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
தென் கொரியாவில், ஜேஜூ நகரில் நடந்த ‘யுனெஸ்கோ’ வின் உள்ளார்ந்த கலாசார பாரம்பரியத்தை காப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான குழு கூட்டத்தில், கும்பமேளா, மனித குலத்தின் குறிப்பிடத்தக்க கலாசார பாரம்பரிய பிரதிநிதித்துவ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாசார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தனது ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புனிதமான கும்பமேளாவுக்கு, மனித குலத்தின் குறிப்பிடத்தக்க கலாசார பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைப்படத்தக்க தருணம் ஆகும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “கும்பமேளா, சாதி, மதம், இன பாகுபாடு இல்லாமல், பூமியில் லட்சோப லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய நிகழ்வு” என்றும் தெரிவித்துள்ளார்.