குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லலித் மற்றும் குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுவில் சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோத்தபாய ராஜபக்ச, கருணாரட்ண ஹெட்டியாராட்சி ஆகியோரின் பெயர்களும் இன்று மனுதாரர்களால் இணைக்கப்பட்டது.
எனினும் அவர்கள் இருவரையும் சாட்சியமளிக்க அழைக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணியால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோரப்படவில்லை. 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
இந்த நிலையில் இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோத்தபாய ராஜபக்ச, கருணாரட்ண ஹெட்டியாராட்சி ஆகியோரின் பெயர்களும் இணைக்கப்பட்டன.
அவர்கள் இருவரையும் சாட்சியமளிக்க அழைக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்யவில்லை. வழக்கு விசாரணை எதிவரும் மார்ச் 29ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.