குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து 2000 ரூபா வேதனம் அதிகரிக்கப்படும் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.இன்று மாலை யாழ் ஏழாலை திவ்யா முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்….
மாணவர்களில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதே அதிகம் சிரமமான விடயம் ஆனாலும் எங்களுடைய ஆசிரியர்கள் மிகக்குறைந்த வேதனத்தைப்பெற்றுக்கொண்டு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சேவை மனப்பாண்மையோடு முன்பள்ளி சிறார்களுக்கு கற்பித்து வருவதானது போற்றுதலுக்குரியதாகும். முன்பள்ளி சிறார்கள் நாற்றுக்களைப்போன்றவர்கள். அந்த நாற்றுக்களை பயன் தரக்கூடிய மரங்களாக உருவாக்குகின்ற உயரிய பணியில் ஈடுபட்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் சேவையும் மகத்தானது.
உண்மையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்படுகின்ற வேதனம் என்பது மிக சொற்பமானதே. அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரமாக அவை நிச்சயம் இருக்கமாட்டாது என்பதை நாம் அறிவோம். இருப்பினும் மாகாண சபையினால் பாரியளவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனத்தை உயர்த்த முடியாத நிதி நெருக்கடியில் தற்போது வடக்கு மாகாணசபை உள்ளது. உங்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கு மத்திய அரசு மாகாணத்திற்கு பணத்தினை ஒதுக்குவதில்லை. இருப்பினும் உங்களது உயரிய சேவையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு (2018) தொடக்கம் 2000 ரூபா வேதன அதிகரிப்பை மேற்கொள்ள உள்ளோம். இதற்காக வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது என்றார்.
நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் அயற்பாடசாலை அதிபர்கள் முன்னபள்ளி சிறார்களின் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.