குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
மாணவர்கள்; கொல்லப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி முழுமையான விளக்கம் தர வேண்டும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினரில் உண்மையான குற்றவாளியைக் இனங்கண்டு; அவருக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் வடக்கு கிழக்கில் இத்தகைய சம்பவங்கள் இனி;மேலும் இடம்பெறக்கூடாது போன்ற கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டன.
எனினும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் திருப்தியில்லையென எனத் தெரிவித்துள்ள மாணவர்கள் இது தொடர்பில் ஏனைய மாணவர்களுடன் கலந்துரையாப்படும் எனவும் இதனை அவர்கள் ஏற்காத பட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர், மாணவ பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்….…
அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பிரதான விரிவுரையாளர்கள், மாணவ பிரதிநிதிகள் ஆகியோர் இன்று (01) ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்
குறித்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் மிகவும் கவலையடைந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி பக்கச்சார்பற்றதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இன்று இடம்பெற்ற சந்திப்பில் மாணவர்களின் வேண்டுகோளுக்கமைய மரண விசாரணை அறிக்கையை விரைவுபடுத்துவதற்கு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அந்த அறிக்கை கிடைத்தவுடன் குறித்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016-11-01
யாழ் பல்கலை விவகாரம் – இன்று விஷேட கலந்துரையாடல்
Nov 1, 2016 @ 07:04
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்ச்சைகள் தொடர்பில், இன்று ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்துடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்திச் செல்வதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் என அமைச்சர் சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.