குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள முகமாலை கிராமத்தில் இன்று (12) மூன்றாவது கட்ட மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் மூன்று முப்பது மணியளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப. ஜெயராணி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
63 ஏக்கரில் 5336 கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் மாவட்ட அரச அதிபரிடம் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகளினால் கையளிக்கப்பட்டது. 2009 முன் படையினர் மற்றும் விடுதலைப்புலிகளின் யுத்த முன்னரங்க பகுதியாக இருந்த முகமாலையில் அதிகளவு கண்ணிவெடிகளும், ஆபத்தான வெடிக்காத வெடிப்பொருட்களும் நிறைந்த பிரதேசமாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்றைய தினம் சுமார் 25 குடும்பங்கள் மீள்குடியேற பதிவுகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன நடவடிக்கை முகாமையாளர் அடம், நிகழ்ச்சி திட்ட உதவியாளர் கெலன்பெடி, போரூட் நிறுவன அதிகாரி கிராம அ லுவலா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்