ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் போட பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு சில வேட்பாளர்கள் பணம் கொடுப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தி இருப்பதாகவும் கடைசி 3 தினங்களில் யாரும் எதிர் பாராத நாளில் திடீரென பணப்பட்டுவாடா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் இரவில் வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்லக்கூடாது என ஏற்கனவே தடை விதித்துள்ள தேர்தல் ஆணையகம் ஒவ்வொரு வேட்பாளரின் பிரசாரத்தையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாக்குப் போடுவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை எந்த வாக்காளராவது வாங்கியது தெரிய வந்தால், அவர்களது வீடுகளில் வருமான வரி சோதனையினர் அதிரடி சோதனை நடத்துவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.