ஓய்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என இங்கிலாந்து ஆரம்ப ஆட்டக்காரரும், முன்னாள் அணித்தலைவருமான அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி அலஸ்டயர் குக்கின் 150-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் இங்கிலாந்து வீரர் என்பதுடன் ஒட்டுமொத்த அளவில் 8-வது வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். அஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் அவர் சோபிக்க தவறியதால் இந்த தொடருடன் ஓய்வு பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் எதிர்காலம் குறித்து தான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது தனக்கு தெரியாது எனவும் 32 வயதான அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார். தற்போது முழு கவனமும் இந்த டெஸ்ட் மீது தான் இருக்கிறது எனவும் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டி இதுவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘150-வது டெஸ்டில் ஆடுவது பெருமைப்படக்கூடிய விஷயம் எனவும் காயமின்றி தொடர்ச்சியாக 147 டெஸ்டுகளில் விளையாடியது அதிர்ஷ்டமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.