குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
காரை நகர் மடத்து வெளி மாதிரி கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமித்து உள்ளமையினால் , அப்பகுதி கிடைக்கபெற்ற வீட்டுத்திட்டங்கள் சங்கானை வீசி வளவு மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியில் மாவட்டத்திற்கு தலா 5இலட்சம் ரூபாய் பெறுமதியில் 24 வீடுகள் அமைக்கும் திட்டம் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு கிடைக்க பெற்றது. யாழ்.மாவட்டத்திற்கான வீட்டுத்திட்டத்தில் கிடைக்கப்பெற்ற 24 வீட்டு திட்டத்தினையும் காரைநகர் மடத்துவளவு மாதிரி கிராமத்திற்கு வழங்குவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து இருந்தனர்.
அந்நிலையில் குறித்த மாதிரி கிராமம் அமைந்துள்ள பகுதிகளை சூழவுள்ள 126 ஏக்கர் காணியை கடற்படையினர் அடாத்தாக சுவீகரித்துள்ளனர். அதில் மடத்துவளவு மாதிரி கிராமத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் காணியையும் கடற்படையினர் அடாத்தாக சுவீகரித்து உள்ளனர். மாதிரி கிராம மக்களுக்கு 24 வீட்டு த்திட்டம் கிடைக்க பெற்று உள்ளதால் அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்குமாறு மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் , மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் , மாதிரி கிராமத்தை சேர்ந்த மக்கள் என பலரும் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இருந்த போதிலும் காணியை கடற்படையினர் விடுவிக்க இணக்கம் தெரிவிக்காது புதிய முள் வேலிகளை தாம் சுவீகரித்த காணிகளை சுற்றி கடற்படையினர் அமைத்தனர். காணிகள் கடற்படையினரால் மாதிரி கிராம மக்களுக்கு கையளிக்கப்படாததால் மாதிரி கிராமத்திற்கு கிடைக்க பெற்ற வீட்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
இந்த வருட இறுதிக்குள் வீட்டு திட்ட பணிகள் ஆரம்பிக்க படவேண்டிய கட்டாயம் இருந்தமையால் விரைந்து செயற்பட்ட அரச அதிகாரிகள் காரைநகர் மடத்து வளவு மாதிரி கிராமத்திற்கு கிடைக்க பெற்ற 24 வீட்டு திட்டத்தினையும் , சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அராலி வீசி வளவு மாதிரி கிராம மக்களுக்கு மாற்றி வழங்கபட்டு உள்ளன.
காரைநகர் மடத்துவளவு மாதிரி கிராம மக்களின் காணிகளை கடற்படையினர் மக்களிடம் கையளித்தால் அடுத்த வருட திட்டத்திற்குள் அப்பகுதி மக்களுக்கு வீட்டு திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.