குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளிநாட்டு பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளார். இந்தியாவின் மும்பை நகரில் நடைபெறவுள்ள திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவும் ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகவும் உதய கம்மன்பில இவ்வாறு நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கை குறித்து எதிர்வரும் 9ம் திகதி பரிசீலனை செய்யப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யான்துடுவ அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரிடம் 11 கோடி ரூபா மோசடி செய்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உதய கம்மன்பில வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் இந்தியாவில் தங்கியிருக்கவும், டிசம்பர் மாதம் 9ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் ஜப்பானில் தங்கியிருகக்வும் அனுமதி வழங்குமாறு உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். உதய கம்மன்பிலவின் இந்தக் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.