குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடுச் சந்திக்கருகில் அமைந்துள்ள பாரதிபுரம் கள்ளுத் தவறணையை அகற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மற்றும் மாவட்ட அரச அதிபருக்கு பொது அமைப்புகளால் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. பதினைந்து பொது அமைப்புகளும், 175 க்கு மேற்பட்ட பொது மக்களும் கையொப்பம் இட்டு குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
குறித்த கள்ளுத் தவறணையால் பொது மக்களும் மாணவா்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும், இந்தக் கள்ளுத் தவறணையிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் பிள்ளையார் ஆலயமும், 100 மீற்றர் தூரத்தில் அம்மன் ஆலயமும் உள்ளன.
அதேவேளை 150 மீற்றர் தூரத்தில் தேவாலயமும்,200 மீற்றர் தூரத்தில் சிறுவா் முன்பள்ளியும் காணப்படுவதோடு, கள்ளுத் தவறணைக்கு முன்பாக பொதுச் சந்தையும், ஆதவன் விளையாட்டுக் கழகமும் காணப்படுகிறது.
எனவே குறித்த கள்ளுத் தவறணையால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. பாராளுமன்ற உறுப்பினரான தங்களின் கவனத்திற்கு குறித்த விடயத்தை ஏற்கனவே கொண்டு வந்த போதும் தாங்கள் 07-01-2017 திகதி கடிதம் மூலம் மூன்ற மாதக் கால அவகாசம் கோரியிருந்தீர்கள்.
இதன் போது பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கம் மற்றும் பொது மக்களையும் ஒன்றிணைந்து நல்ல முடிவு தருவதாக ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவே எமது கோரிக்கையினை மீண்டும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
மகஜரை பெற்றுக்கொண்ட மாவட்ட அரச அதிபா் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தாங்கள் இது தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்தனர் என பாரதிபுரம் பிரதேச மக்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.