பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய , வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, வடகொரியா தனது ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நாவின் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிய போதே டில்லர்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம், அமெரிக்காவில் பேசிய டில்லர்சன், வடகொரியா எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் பேசத் தயார் எனத் தெரிவித்திருந்த கருத்திற்கு, மாற்றாக இந்த கருத்து அமைந்துள்ளது.
உலகளவிலான கண்டனம் மற்றும் சர்வதேச அளவில் வலுத்துவரும் தடைகளையும் மீறி, இந்த ஆண்டு, பல ஆயுத சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியிருந்தது. இந்தநிலையில் இந்த வாரத்தொடக்கத்தில் பேசியிருந்த டில்லர்சன், ஒன்றாக அமர்ந்து பேசலாம் எனவும் இரு நாடுகளும் இணைந்து எந்தெந்த விஷயங்களில் பணியாற்ற முடியும் என பேசலாம் எனவும் அழைத்திருந்தார்.
அவரின் கருத்தை, சீனா மற்றும் ரஷ்யா வரவேற்றிருந்த போதும் அந்த கருத்திற்கு எதிர்மறையான கருத்தினை வெளியிட்டிருந்த வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு முன்பாக, வடகொரியா எல்லா அணுஆயுதங்களையும் அழிப்போம் என உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. மேலும் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ், ஜனாதிபதியின் பார்வையில் மாற்றமில்லை என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஐ.நாவின் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசிய டில்லர்சன், இதுகுறித்து, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுமே, வடகொரியாவை வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எனினும் இருநாடுகளும் அதை மறுத்துவிட்டன.
இந்தநிலையில் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன எனவும் ஆனால், பேச்சுவார்த்தைக்காக வடகொரியா வைக்கும் கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா பணியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை முன்பு தற்போது நடைமுறையில் உள்ள எந்த தடையையும் தளர்த்துவதை தாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.