யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுக்கள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
இந்தப் பொது அணியில் சமூக அமைப்புக்கள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றினைந்துள்ளதாகவும் , அவர்களின் ஆதரவுடனையே களமிறக்க பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கு தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம பெறுவதாக அறியமுடிகின்றது. வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றன.
அத்துடன், இந்து அமைப்பான சிவ சேனை இந்த அணியுடன் இணையாமல் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனையே நியமிக்வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இன்று வலியுறுத்தியுள்ளார். எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஏற்கனவே மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரனை களமிறக்க தமிழரசு கட்சிக்குள் பேச்சுக்கள் இடம்பெற்ற வேளை அதற்கு யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சி உறுப்பினருமான ஒருவர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், தமிழரசு கட்சி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடமும் நேரில் தனது எதிர்ப்பை கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.