ஆர்.கே.நகர் தேர்தலில் காவல்துறை அதிகாரிகளை மாற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் வடக்கு மண்டல இணை ஆணையாளர் சுதாகர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல இணை ஆணையாளராக போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையாளர் பிரேமானந்த் சின்ஹாவை நியமிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் இந்த மாதம் 21ம்திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை இடைத்தேர்தலில் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து அனைவரையும் தேர்தல் ஆணையகம் மாற்றியிருந்தது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தொகுதிக்குள் மாற்று வாகனங்கள் வரக்கூடாது, அனுமதியில்லாமல் வரும் வெளியூர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மாலை 6 மணிக்கு மேல் வீடு வீடாக வாக்காளர்களை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையகம் விதித்துள்ளது.
ஆனாலும் தொகுதிக்குள் வாக்குகளுக்காக பணக் கொடுப்பனவு எளிதாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பல இடங்களில் வாகனங்களைப் பிடித்து கொடுத்தாலும் காவல்துறையினர் அதைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சுதாகர் வடக்கு இணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வடக்கு மண்டல இணை ஆணையாளராக பிரேமானந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.