காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, இன்று புதன்கிழமை ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவுஅமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்களான சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக் மற்றும் முகமது யாசின் மாலிக் ஆகியோர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து கன்யார், ரைனாவாரி, நோவட்டா, எம்.ஆர்.கஞ்ச், சஃபா கடல் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிப்பதாகவும் அங்குள்ள போக்குவரத்து வழிகளில் முட்கம்பி சுருள்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைதரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா பகுதிக்கும் ஜம்முவின் பன்னிஹால் பகுதிக்கும் இடையிலான புகையிரத சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்போது பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதனையடுத்து அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான மிர்வைஸ் மீண்டும் தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இளம் பெண்கள் உள்ளிட்ட நமது காஷ்மீரிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவது தொடரும் நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.