ஜெயலலிதா மரணம் அடைந்த பின் வெற்றிடமான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 12ம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணம் பரிமாறப்பட்டதாகக் எழுந்த முறைப்பாடு காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர். கடந்த சில தினங்களாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின.
அனைத்து வாக்குசாவடி மையங்களும் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் காவற்துறையினர், மற்றும் துணை ராணுவ காவற்துறையினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலையிலேயே வாக்களிக்க ஆர்வத்துடன் சென்றிருந்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் 1,10,903 ஆண் வாக்காளர்கள், 1,17,232 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க காவற்துறையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆர்.கே.நகர் வாக்கு நிலவரம் வெளியிடப்படும்: ராஜேஷ் லக்கானி
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தகவல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்காக ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக வாக்குப்பதிவை கண்காணித்து வருகிறார்.
இதேவேளை சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.