குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் காவல்துறை இராச்சியமொன்றை உருவாக்க முயற்சிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் எதிராளிகளை அடக்குமுறைக்கு உட்படுத்தில் தேர்தல் வெற்றிகளை பதிவு செய்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சாரதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை எந்த நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்தார்கள் என்பது தமக்கு புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை வண்டு ஒன்றில் தங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அஸ்பஸ்டோஸ் கூரைத் தகடுகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பெருமிதம் பேசிக்கொள்ளும் நிலையில், ரஸ்யாவிலிருந்து அஸ்பஸ்டோஸ் கூரைத் தகடுகள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தேயிலையில் வண்டு இருந்த காரணத்தில் இலங்கைத் தேயிலைக்கு ரஸ்யா தடை விதித்துள்ளதாகவும், இந்த தடையை நீக்கிக் கொள்ள ரஸ்யா மீதான அஸ்பஸ்டோஸ் தடை நீக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.