முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை எடுத்து மரபணு சோதனை செய்வதால் என்ன பிரச்சனை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஜெயலலிதாவின் வாரிசு என கூறும் வழக்கில் அம்ருதாவிடம் ஏன் டிஎன்ஏ சோதனை செய்யக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா அண்மையில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் உடலை தோன்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதா உடலை தோன்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா உரிமைகோரும் வழக்கில் ஏன் டிஎன்ஏ சோதனை நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் விளம்பரத்துக்காக டிஎன்ஏ சோதனை கேட்பதாக கூறினார். ஒருவருக்கு அனுமதி வழங்கினால் ஆயிரம் பேர் இதுபோல் வருவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் வாரிசா என முடிவு செய்தபின் உடலை ஒப்படைக்க முடிவு செய்யலாம் என்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதிக்கலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் இது எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் விளம்பரம் தேட ஒன்றுமில்லை என்றனர். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உரிமைகோராமல் மறைந்த பிறகு ஏன் உரிமை கோருகிறீர்கள் என்றும், டிஎன்ஏ சோதனையை நீங்கள் கேட்காத போது எப்படி உத்தரவிட முடியும் என்றும், மனுதாரரிடம் நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பியதோடு, அத்துடன் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதிப்பதால், தமிழகத்தின் அமைதி பாதிக்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார். இதனைத்தொடர்ந்து டிஎன்ஏ சோதனை, உடல் ஒப்படைப்பு தொடர்பாக நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என நாங்கள் ஆவணங்களை தாக்கல் செய்கிறோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அவ்வேளை மாநில முதல்வராக இருந்தவரின் நற்பெயரில் அரசு அக்கறை கொள்கிறது என்றும் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். மேலும் பெங்களூரை சேர்ந்தவர்கள் சென்னை வந்ததை குறிப்பிடாமலேயே மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனை காரணம் காட்டியே வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என்ற நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.