குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் கடைத்தொகுதியொன்று தீ விபத்துக்கு இலக்காகியிருந்தது. இதனால் பெருமளவு கடைகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தீக்கிரையான கடைகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. கடைகள் தீக்கிரையான 122 வர்த்தகர்களுக்கு 74 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க இணங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் முழு வசதிகளுடன் கூடிய தீயணைப்புப் படைப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தீக்கிரையான கடைகள் மீளவும் நிர்மானிப்பதற்காக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.