கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது!
ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்!
கல்வி அமைச்சினால் வெளியிடப்படுகின்ற அனைத்து சுற்றறிக்கைகளையும் தமிழ் மொழியிலும் வெளியிட நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு எமது மக்கள் சார்பில் எனது நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, தமிழ் பாடநூல்கள் தொடர்பில் நான் ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ள விடயங்கள் குறித்தும் கல்வி அமைச்சர் அவர்கள் அவதானமெடுத்து, உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் உட்பட அனைத்துக் கடிதங்கள், ஆவணங்கள் என்பன இதுவரையில் தனிச் சிங்கள மொழியிலேயே தமிழ் பாடசாலைகள் மற்றும் கல்விப் பணிமனைகளுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளதால், தமிழ்மொழி மூலப் பரிச்சயம் கொண்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமங்களையும், பாதிப்புகளையும் எதிர்நோக்கி வருவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நான் தொடர்ந்தும் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளதோடு, கல்வி அமைச்சிலும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அந்த வகையில், தற்போது இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்த விடயமாகும்.
அதேபோன்று, நான் ஏற்கனவே நாடாளுமன்றத்திலும். கல்வி அமைச்சிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ள தமிழ் மொழி மூலமான வரலாறு மற்றும் இந்து சமயம் தொடர்பிலான பாடசாலை நூல்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மொழி மூல பாடசாலை வரலாற்றுப் பாடநூல்களில் இந்த நாட்டு தமிழ் மக்களது வரலாறு குறித்து மறைக்கப்பட்டதும், திரிபுபடுத்தப்பட்டதும், தவிர்க்கப்பட்டதுமான நிலைமைகளே காணப்படுகின்றன. அதேபோன்று இந்து சமய பாடநூல்களிலும் குறைகள் மற்றும் தவறுகள் காணப்படுகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் நான் முழுவிபரங்களுடன் வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
எனவே, இவ்விடயங்கள் குறித்தும் கல்வி அமைச்சர் அவர்கள் அவதானத்தில் கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அண்மையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தமிழ் பாட வினாத்தாளில் ஏற்பட்டிருந்த தவறு குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இத்தகைய விடயங்களில் தெளிவற்றவர்களைக் கொண்டு, தமிழ் மொழி மூல மாணவர்களது கல்வியில் பாதிப்பினை உண்டு பண்ணும் செயற்பாடுகள் தவிர்க்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.