ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இம்முறை தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ வெளியிட்டுவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஊழல் மோசடியில்லாத தூய ஆட்சிக்கான சுதந்திரத்தின் உடன்படிக்கை மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் எதிர்காலத்திற்காக தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவுகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
நேர்மையான மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்து எதிர்காலத்தில் சிறந்ததோர் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான வாயிலை இந்த தேர்தலின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.