பேரறிவாளனுக்கு வழங்கியது போல் நளினிக்கு 6 மாதம் சிறை விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, மற்றும் காஞ்சீபுரம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்தை அகற்றி விட்டு, வரையப்பட்ட படங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் ஜெசி ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “பொது இடங்களில் மதம் சார்ந்த படங்களை வரைவது ஏற்புடையதல்ல, சமூகவிரோதிகள் பொது இடங்களில் மதம்சார்ந்த படங்களை வரைவது கண்டிக்கத்தக்கது. மக்கள்மன்ற நிர்வாகிகள் மகேஷ், ஜெசி ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப்பெறவேண்டும்.
சிறைக்குள், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியை சந்தித்து நலம் விசாரித்தேன். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக மனவேதனையுடன் தெரிவித்தார். அவருக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும். இதே வழக்கில் பேரறிவாளனுக்கு 2 மாதம் பரோல் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோன்று நளினிக்கும் பரோல்வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் 25 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருவதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும்” எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதேவேளை திருமாவளவன் சிறையில் சந்தித்து பேசிய மகேஷ் மற்றும் ஜெசிக்கு நேற்று மாலை நீதிமன்றம் பிணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.