குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைமைத்துவ பதவி இளைஞரிடம் வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது குடும்ப உறுப்பினர்கள் எவரும் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு நியமிக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியறிவு உடைய புத்திசாதூரியமான ஓர் இளைஞர் கட்சியை வழிநடத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். குடும்ப அரசியல், ஊழல் மோசடிகள், அடவாடித்தனம் மற்றும் தவறான ஆட்சி நாட்டை சீரழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
1982ம் ஆண்டில் சுதந்திரக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற போது, தலைமை பதவிக்கு வருவோம் என தாம் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு கட்சியில் இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.