அமைதித் தீர்வுக்கான, தமது அமெரிக்க தூதரை திரும்ப அழைப்பதாக பாலத்தீனம் அறிவித்துள்ளது இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தமையினை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
டிரம்பின் இந்த அறிவிப்பினை அடுத்து அமெரிக்காவின் எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் தாங்கள் உடன்படப்போவதில்லை என பாலத்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஜெருசலேத்தை தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்து காஸாவில் வெடித்த போராட்டம் மற்றும கலவரங்களில் சிக்கி இதுவரை 13 பாலத்தீனியர்கள் இறந்துள்ளார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள், இஸ்ரேல் படைகளுடன் ஏற்பட்ட மோதல்களிலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையிலேயே பாலத்தீனிய விடுதலை அமைப்பின் (பி.எல்.ஓ) தூதர் {ஹசம் சோம்லோட்டியை, பாலத்தீனிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரியாட் அல் மாலிகி, திரும்ப அழைத்துக் கொண்டதாக பாலத்தீனிய செய்தி நிறுவனமான வாஃபா கூறி உள்ளது.
இஸ்ரேல் – பாலத்தீனிய பிரச்சனைக்கு ஜெருசலேமே மைய காரணமாக இருக்கிறது. துருக்கியின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் கைப்பற்றியது.
எனினும், எதிர்காலத்தில் அமைய இருக்கும் தங்கள் தேசத்துக்கு கிழக்கு ஜெருசலமே தலைநகராக இருக்கும் என, பாலத்தீனியர்கள் கூறுகிறார்கள். ஜெருசலேம் “பாலத்தீன மக்களின் அழியா தலைநகராக இருக்கும்” என, பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை, அறிவித்திருந்தார்.
ஜெருசலேம் மீதான இஸ்ரேல் இறையாண்மை இதுவரை சர்வதேச சமூகத்தினால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அதனால், இஸ்ரேலுக்கான தங்களது தூதரங்களை இஸ்ரேலின் மைய நகரமான டெல் அவிவில்தான் அமைத்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்க தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்றும் பணிகளை தொடங்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.