கோரிக்கைகளுக்கு உரிய பதில் இல்லையெனின் போராட்டம் தொடரும் – இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…
வடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால், போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் புத்தாண்டு தினமான இன்று மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
வவுனியாவில் 195 மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறு தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவைக் கண்டித்து, இன்று (01) முதல் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வடமாகாண ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஒன்றிணைந்த தொழிற்சங்க பிரச்சினையினை முதலமைச்சர் தீர்த்து வைத்திருக்க முடியும். புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வர தயார். ஆனால், எமக்கென தனித்துவமான பாதையினைத் தர வேண்டுமென்றே வலியுறுத்துகின்றோம்.
எமது கோரிக்கைக்கும் செவிசாய்க்க வேண்டும். கனடாவில் இருந்து யாரும் வந்தால், கை கொடுத்துக் கதைக்கின்றார். இந்தக் கதிரையை வாங்கிக் கொடுத்த நாங்கள் கதைக்க சென்றால், கதைக்க முடியாது வெளியில் போ என்கின்றார்.
முதலமைச்சருக்கு எதிராக செயற்படுகின்றதாக புத்திஜீவிகள் சொல்லியிருக்கின்றார்கள். கடைசிவரை அவ்வாறு முதலமைச்சருக்கு எதிராக செயற்படவில்லை.
தவறுகளை சரி செய்ய வேண்டும். தவறுகளை சரி செய்திருந்தால் நியாயப்படுத்தல் வந்திருக்க முடியாது. எமது கோரிக்கைக்கு செவிமடுத்து சாதகமான பதிலை தர வேண்டும். கதைத்து முடிவு எடுக்க வேண்டும்.
முதலமைச்சரின் செயலால் ஒட்டுமொத்த பொது மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட போகின்றது.
மாணவர்கள் அல்லல்படப் போகின்றார்கள். எம்மைப் பிழையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். இலங்கை போக்குவரத்துச் சேவை மக்களுக்கென சிறந்த சேவையாற்றி வந்தோம். இது ஒரு சின்னப் பிரச்சினை.
முதலமைச்சர் நினைத்திருந்தால் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். முதலமைச்சர் மத்திய அரசாங்கத்துடன் கதைத்து ஒரு முடிவினை சொல்லியிருக்கலாம்.
தான்தோன்றித்தனமாக பஸ் நிலையத்தினைக் கட்டி விட்டு, சிறுபிள்ளைக்கு சொல்வது போன்று எமக்குச் சொல்வது முற்றிலும் தவறான விடயம். இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதனால், பொது மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பும் கோருகிறோம் என கூறியுள்ளனர். அத்துடன், தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடில் தமது போராட்டம் தொடருமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.