“நல்லிணக்க அரசாங்கமும் எங்களை வீதியில் அலைய விட்டு துன்பங்களை அனுபவிக்குமாறு, வேடிக்கை பார்க்கின்றது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டு உள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக, காணமல் போன, தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி 316 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியுத்தத்தின் முன்னரும், அதற்கு பின்னரான காலப்பகுதிகளிலும், கைது செய்யப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும், படையினரிடம் சரணைடைத்தும் உள்ள, தமது உறவுகள் தொடர்பில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பதில்களும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இங்கு போராடிக்கொண்டு இருக்கும் மக்கள் கருத்து தெரிவிக்கையில் “தமக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட பலரும், பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றபோதும், யாரும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக இல்லை. அனைவரும் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்கும் இந்த தருணத்திலும் நாம் வீதியிலிருந்து கண்ணீர் வடிக்கின்றோம். நல்லாட்சி அரசை நம்பி இருந்தோம். ஆனால் பத்து மாதங்களுக்கு மேலாக போராடியும் அரசாங்கம் எமக்கு சாதகமான பதில் எதையும் தரவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.