தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கு, மற்றும் கடந்த 2012ஆம் ஆண்டு மேற்கொண்ட காசோலை மோசடி தொடர்பான இரண்டு வழக்குகளை இன்று வெள்ளிக்கிழமை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் விஜய் மல்லையாவுக்கு இந்திய சட்டத்தின் மீது மரியாதை இல்லை எனத் தெரிவித்த நீதிமன்றம் நாடு திரும்ப தான் தயாராக இருப்பதாகவும் ஆனால் தனது கடவுச்சீட்டு முடக்கப்பட்டதாலேயே தன்னால் நாடு திரும்ப முடியவில்லை என அவர் கூறுவது பொய் எனவும் சட்ட நடவடிக்கைகளை அவர் துஷ்பிரயோகம் செய்கிறார் எனவும் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் கடன்பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகின்றார். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பல முறை அழைப்பாணை அனுப்பியும் அவர் இதுவரை நேரில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.