குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பொறுப்பு கூறல் விவகாரத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் இதுவரையில் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் சிவில் சமூகம் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தமை தொடர்பில் எவ்வித வருத்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என்ற நிலைப்பட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள முன்னிருந்தே கொண்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என தாம் குற்றம் சுமத்தவில்லை என்ற போதிலும் இன்னும் பல காரியங்களை செய்திருக்கலாம் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.