இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக செயற்படுமாறு பிரித்தானியா அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல் அச்சம் இலங்கையிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த விடுமுறைகாலத்தில் ‘பயங்கரவாத தாக்குதல்கள் நிராகரிக்க முடியாது’ என்ற நாடுகளில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பான வரைபடத்தில் தாய்லாந்து தொடக்கம் மாலைதீவு மற்றும் பிலிப்பைன்ஸ் வரையிலான இடங்கள் காணப்படுவதாகவும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகவும், பிரித்தானியா வெளிவிவகார பிரிவு எச்சரித்துள்ளது. சனநடமாட்டம் அதிகமாக காணப்படும் இடங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரசன்னமாகும் பகுதிகளை, பயங்கரவாதிகள் இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதாக எச்சரித்துள்ள பிரித்தானியா, பொது நிகழ்வுகள், கொண்டாங்கள், களியாட்டங்கள் போன்றவை இடம்பெறும் இடங்களில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.