ரஷ்யாவின் ஏழு விமானங்களை சிரிய கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலை கடந்த டிசம்பர் 31-ம் திகதி சிரிய கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாக ரஷ்யாவின் டெய்லி கோமர்செண்ட் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
சிரிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் குறித்து டெய்லி கோமர்செண்ட், “கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிரியாவில் ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. சிரிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய இத்தாக்குதல் ரஷ்யாவுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டு நேரடியாக போரில் ஈடுபட்டனர்.
இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கண்டனங்கள் எழுந்தும் தொடர்ந்து ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தி வந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து சிரியாவில் ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாகவே கிளர்ச்சியாளர்களின் இந்தத் தாக்குதல் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.