குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுவிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆணைக்குழுக்கள் இயங்கி வந்தன எனவும், கடந்த காலங்களில் இவ்வாறான ஆணைக்குழுக்களின் விசாரணைகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அமைச்சர்களுக்கு எதிராக சட்டங்கள் மிகவும் மந்த கதியிலேயே அமுல்படுத்தப்பட்டிருந்தன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நான்கு அமைச்சர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நீதியான ஓர் முறைமையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.