குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்த இடத்தில் எந்தவொரு நினைவுத்தூபியும் அமைக்கப்படாது. இனவாதிகள் பொய்யான பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர் என யாழ். நாகவிகாரையின் தற்போதைய விகாராதிபதி வண. கலைமாணி மீகஹந்துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
மறைந்த விகாராதிபதி சங்கைக்குரிய ஞானரத்ன தேரர் 30 ஆண்டுகளாக தமிழ் மக்களுடன் வாழ்ந்தவர். தமிழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியவர். இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
விகாராதிபதியைத் தகனம் செய்வதற்கு உரிய தரப்புகளிடம் அனுமதிகள் பெறப்பட்டன. தேரர்களின் பூதவுடல் தென்னிலங்கையிலும் பொது இடத்தில்தான் தகனம் செய்யப்படுகிறது. தகனம் செய்வதுடன் முடிந்துவிடும், அந்த இடத்தில் நினைவுத்தூபி கட்டியெழுப்பப்படாது.
நாம் மதத்தைப் பரப்புவதற்காக ஒருபோதும் செயற்படப்போவதில்லை. அந்த எண்ணம் எம்மிடம் இல்லை. இனவாதிகள் சிலரே இந்த விடயத்தை வைத்து தேவையற்றவகையில் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர் என தெரிவித்தார். யாழ். நாக விகாராதிபதி சங்கைக்குரிய ஞானரத்ன தேரரின் பூதவுடல் யாழ். நகரின் மத்தியிலுள்ள முற்றவெளிப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி தகனம் செய்யப்பட்டது.
முற்றவெளியில் பூதவுடல் தகனம் செய்வதற்கு தடைகோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குக்கு ஆதரவாக 10 சட்டத்தரணிகள்வரை முன்னிலையாகினர். எனினும் தேரரின் பூதவுடலை யாழ். முற்றவெளியில் தகனம் செய்வதற்கு நீதிமன்று அனுமதியளித்தது. என்பது குறிப்பிடத்தக்கது.