குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுடன் நெருங்கி செயற்பட்ட காரணத்தனால், இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த பிரிகேடியர் சுரேஸ் சாலேவின் கீழ் இயங்கி வந்த இரண்டு புலனாய்வுப் பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளன.
பிரிகேடியர் சுரேஸ் சாலேவிற்கு பதிலாக பிரிகேடியர் விஜேந்திர குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் சாலே, பாதுகாப்பு நிறுவனங்களின் நம்பிக்கையை இழந்த காரணத்தினால் இவ்வாறு நீக்கப்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் சாலே போலியான புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்துடன் குறிப்பாக கோதபாய ராஜபக்ஸவுடன் சாலே நெருக்கமான தொடர்புகளைப் பேணியதாகவும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஸ்தாபக ஆசிரியர் லசந்த கொலை தொடர்பிலான தகவல்களையும் சாலே வழங்கத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு காரணிகளினால் பிரிகேடியர் சாலே பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.