இந்தியாவில் உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை எனவும் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் அசாதாரண நிகழ்வாக முதல் முறையாக நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன எனவும் நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இந்த நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு உள்பட பல சர்ச்சைகள் குறித்து முறையிட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கவலையையும் ஆட்சேபத்தையும் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு முன்னதாகவே கொண்டு சென்றும் கவனிக்கப்படவில்லை எனவும், இன்று காலையும் அவரிடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டும் அது கவனிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவை தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்திருப்பதாக நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு வழக்கை விசாரிக்கும் அமர்வில் யார் இடம் பெறுவது, எந்த அமர்வில் பேர் இடம் பெறுவது என்பது குறித்து சரியாக முடிவெடுக்காவிட்டால், அதனால் ஏற்படும் தாக்கங்கள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.